மதுரை அயன்பாப்பாக்குழி கால்வாயில் நீர் நுரையுடன் பொங்கி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் அயன்பாப்பாக்குழி கண்மாய் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டது. இந்தக் கண்மாயின் மூலம் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாகப் பொழிந்த வடகிழக்கு பருவமழை காரணமாக இந்தக் கண்மாய் நிறைந்தது. இந்தக் கண்மாயில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக தற்போது வெண் நுரையுடன் நீர் வெளியேறிவருகிறது. சுமார் 5 அடி உயரத்திற்கு மேல் நுரை நிற்பதை அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றனர். சாலையில் இந்த நுரைகள் பறந்துவருவதால் அருகில் பெருங்குடி, விமான நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் விபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் நிறைய நீர் இருந்தும் கழிவுநீர் கலந்த நீரை பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.