தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தஞ்சை அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறையில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் மற்றும் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.