நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளது. காங்கிரஸ்-10 தொகுதி, மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தொடர்ந்து திமுக, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்தியது.
இந்நிலையில், இன்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணுவதற்கான ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை தொடங்கிய நிலையில் மதுரையும், திண்டுக்கல் தொகுதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பின் போது தெர்வித்தார்.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் அண்ணா அறிவாலயம் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாகை, திருப்பூரில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.