‘மது விருந்தில் பெண்களோடு பெரும் தலைகள்! விருதுநகரைக் கலக்கும் வீடியோ!’ என்னும் தலைப்பில் கடந்த அக்டோபர் 02-04 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே நகல் எடுத்த விருதுநகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் அதன் ஓரத்தில் ‘இவனுங்கதான் ஊரில் பெண்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் நிர்வாகிகள். ஊர் உருப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நகல்கள் விருதுநகரில் பரவலாக வினியோகிக்கப்பட்டன. அதனால், மது விருந்தில் கலந்துகொண்ட பெரும் தலைகள் கொதிநிலைக்குச் சென்றுவிட்டனர்.
கடந்த 6-ஆம் தேதி அதிகாலை 3-30 மணிக்கு மணிகண்டன் என்பவரின் வீட்டுக்கதவைத் தட்டினார் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார். அவரோடு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என மொத்தம் 6 பேர் சேர்ந்துகொண்டனர். “ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும்..” என்று கூறி மணிகண்டனை ஜீப்பில் ஏற்றினர். அடுத்து, அதே பகுதியில் குடியிருக்கும் நாராயணமூர்த்தியையும் ஆகாஷ் டிவி பிரேம்குமாரையும் அள்ளிக்கொண்டு அந்த ஜீப் அதிகாலை 4-15 மணிக்கு விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் சென்றது.
“உங்களில் யார் நக்கீரனுக்கு செய்தி கொடுத்தது? மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளரும் ஆசிரியையும் இணைந்திருக்கும் வீடியோவை அடுத்து வெளியிடப் போகின்றீர்களாமே? அந்த வீடியோ உங்களில் யாரிடம் இருக்கிறது?” என்று இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மூவரிடமும் விசாரிக்க.. புகார் அளித்ததாகச் சொல்லப்படும் தொழிலதிபர் முரளியும், ராமமூர்த்தியும் அங்கு வந்தார்கள். தான் கொண்டுவந்த பிவிசி பைப்பை ராமமூர்த்தி சம்பத்குமாரிடம் தர, புகார் அளித்தவர்களின் கண்ணெதிரே மூவரையும் அடி பின்னியெடுத்தார். அடித்த அடியில் மணிகண்டனின் இடது கை வீங்கித் தொங்கியது. அவர்கள் அடி வாங்கி அலறிய காட்சியைக் கண்டு களித்துவிட்டுக் கிளம்பினார்கள் முரளியும் ராமமூர்த்தியும். அவர்கள் சென்றதும் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மணிகண்டனிடம் “நீ போகலாம். உன் மீது வெறும் 75 கேஸ்தான் போட்டிருக்கிறோம்.” எனச் சொல்லி, காலை 6-50 மணிக்கெல்லாம் அனுப்பிவிட்டார். நாராயணமூர்த்தியையும் பிரேம்குமாரையும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.
இடது கையில் மாவுக்கட்டு போட்டிருந்த மணிகண்டன் நம்மிடம் “முரளியும் ராமமூர்த்தியும் நள்ளிரவில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜனை வீட்டில் சந்தித்திருக்கிறார்கள். ‘விருதுநகர் கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துகொண்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிர்வாகிகள் குறித்த தகவலை நக்கீரன் போன்ற மீடியாக்களிடம் சொல்கிறார்கள். வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள். இந்த மூவராலும் எங்கள் மானம் போகிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. அடுத்த வீடியோ ஒன்று ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறதாம். இவர்களை ஏதாவது செய்தே ஆகவேண்டும்.’ என்று இருவரும் ‘தனிப்பட்ட முறையில்’ கேட்டுக்கொள்ள, நள்ளிரவு கடந்தும் விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பரபரப்பானது. இன்ஸ்பெக்டர் தொடங்கி காவலர்கள் வரையிலும் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால், எங்களை அடித்துத் துவைக்கும் சேவைக்காக, அந்தப் பெரும் பணக்காரர் பெரிய தொகை ஒன்றைக் காவல்துறையினரிடம் கொடுத்திருக்கிறார்.
பணத்தைக் கொடுப்பவர் கைகாட்டும் ஆட்களை அடிப்பதும் கொலை செய்வதும் கூலிப்படை செய்யும் வேலைதானே? அதைத்தான் விருதுநகரில் காவல்துறையினர் செய்திருக்கிறார்கள். அதிகாலை 3-30 மணிக்கு வீட்டுக்கு வந்து என்னை இழுத்துச்சென்ற சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கிறது. விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் பதிவு செய்த வழக்கு என்ன தெரியுமா? அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாடியான் கேட் அருகில் போவோர் வருவோரை ஆபாசமாக நான் திட்டினேனாம். போக்குவரத்துக்கு இடையூறு செய்தேனாம். காவல்துறை என் மீது பொய் வழக்கு போட்டதற்கு வலுவான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதனை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி புகார் செய்திருக்கிறேன்.” என்று பெருமூச்சுவிட்டவர் “இரவு நேரத்தில் தன் மகன் நாராயணமூர்த்தியை போலீஸ் இழுத்துச்சென்றதைப் பார்த்த அவருடைய அப்பா சுந்தர்ராஜன் அந்த சோகத்தில் அன்றே இறந்துபோனார். ஒரு ஆத்திரத்தில்தான் விருதுநகரில் சேஷாத்ரி என்பவரைக் கொலை செய்தார்கள். அதுபோல், என் உயிரைப் பறிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.” என்றார் அச்சத்துடன்.
நாம் விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்குமாரை தொடர்புகொண்டு, பிவிசி பைப்பால் அடித்தது குறித்தும், பொய் வழக்கு பற்றியும் கேட்டோம். ”அதுவந்து.. அதுவந்து..” என்று பேசுவதற்கு ரொம்பவே தயங்கிய அவர், “பெட்டிஷனை விசாரிச்சோம். யாரையும் அடிக்கல. அவங்க எல்லாரும் ஒரே ஜாதி. வழக்கு வேணாம்னு சொன்னாங்க. அதனால, சாதாரண பிரிவில் செவன்டி ஃபைவ் கேஸ் போட்டு மணிகண்டனை அனுப்பினோம்.” என்றார்.
தொழிலதிபர் முரளி நம்மிடம் “ஒரு மேரேஜ் பார்ட்டியாத்தான் அந்த மது விருந்து நடந்துச்சு. அது ஒரு பழைய வீடியோ. ஆர்கெஸ்ட்ராவுல பெண்கள் பாடினார்கள். அவ்வளவுதான். ஆறு மாசத்துக்கு முன்னாலயே இது பெரிய பிரச்சனை ஆச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல இதே பிரேம்குமாரும் நாராயணமூர்த்தியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாங்க. இது ஒருவகையான பிளாக் மெயில். இவங்க வேலையே இதுதான். செக்ரட்டரி - டீச்சர் வீடியோ ரிலீஸ் பண்ணப்போறோம்னு மணிகண்டன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். இவங்க விவகாரத்தை சட்டபூர்வமா பண்ணனும்னுதான் போலீஸ்கிட்ட போனோம். சென்சிடிவான விஷயம்கிறதால விடியுறதுக்கு முன்னால விசாரிச்சிட்டா நல்லதுன்னு நெனச்சோம். மற்றபடி போலீசுக்கு யாரும் பணம் கொடுக்கல.
இவங்க ஏன் மாறி மாறி இதே வேலையா இருக்கிறாங்க தெரியுமா? விருதுநகர் நாடார் சமுதாயத்துக்கென்று முன்னோர்கள் பல இடங்களில் சொத்து வாங்கிப் போட்டிருக்காங்க. கோவில் சொத்து.. ஸ்கூல், காலேஜ்ன்னு நெறய இருக்கு. சுயநலத்தோடு கோடிக்கணக்கான கோவில் சொத்தை சிலர் அவங்க பேர்ல பதிவு பண்ணிட்டாங்க. ஸ்கூல் பொறுப்புல இருந்துக்கிட்டு கோடி கோடியா சுரண்டிட்டாங்க. கோர்ட்ல கேஸ் ஒருபக்கம் நடந்துக்கிட்டிருக்கு. பணத்தைத் திருப்பித் தந்திடறோம்னு மொதல்ல காம்ப்ரமைஸுக்கு வந்தாங்க. அப்புறம், யாரோ தூண்டிவிட்டு மனசு மாறிட்டாங்க. தட்டிக் கேட்கிறவங்கள ஏதாவது பண்ணி அசிங்கப்படுத்தணும்கிறதுதான் இவங்களோட நோக்கம். இந்த ஊரு மீதான அக்கறையில் நெறய நல்லது பண்ணுனாரு எங்க அண்ணன் மதிப்பிரகாசம். அவரு இறந்து ரெண்டு வருஷமாச்சு. அப்பவும் இவங்க விடல. இரண்டாமாண்டு நினைவு அஞ்சலிங்கிற பேர்ல, அவரை தாதான்னும் கோர்ட்டையும் போலீஸையும் விலை பேசியவர்ன்னும் நோட்டீஸ் அடிச்சி அசிங்கப்படுத்தினாங்க. பிசினஸ்ல ரொம்ப பிசியா இருந்தும், ஊர் நன்மைக்காக பொது வாழ்க்கைக்கு வர்றோம். எனக்கும் அவங்களுக்கும் சொந்தப் பகை எதுவுமில்ல. முன்னோர்களின் உழைப்பையும் தியாகத்தையும் மறந்து சுயநலவாதிகள் அபகரித்த பொதுச்சொத்துக்களை மீட்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடுதான் நாங்க செயல்படறோம்.” என்று நீண்ட விளக்கம் தந்தார்.
மணிகண்டனோ “கோவில் சொத்தை அபகரித்தவர்களிடமிருந்து மீட்க நினைப்பதெல்லாம் சரிதான். அதற்குத்தான் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறதே? கல்வி நிறுவனங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது குற்றமா? அதனை அம்பலப்படுத்துவன் மூலம், தரமும் தகுதியும் இல்லாதவர்களை வெளியேற்றி, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கச் செய்வது குற்றமா? அந்தரங்க வீடியோவை யார் வெளியிட்டார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? காவல்துறையினரை ஏவி அடித்து மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று வலியுடன் கேட்டார்.
அவரவர் ‘நியாயம்’ அவரவர்க்கு என்றாலும், யாரும் பொது நீதியிலிருந்து விலகுவதை உலகம் ஏற்றுக்கொள்ளாது!