தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. இதில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் கூட்டணி வைத்து போட்டியில் இறங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஊரக உள்ளாட்சி துறைகளுக்கு கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேச்சை சின்னம், அடுத்து ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள் மேலும் மாவட்ட கவுன்சிலர்களுக்கு மட்டும் சின்னம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளோடு அந்தந்த மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக் கட்சிகளுக்கு இடத்தை பகிர்ந்து கொடுத்தது. திமுக கூட்டணியில் பெரும்பாலும் கூட்டணியில் பிரச்சனை இல்லை. அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடங்களை கொடுக்க முடியாமல் கடைசி வரை போராடி அவர்களுக்கு தேவையான இடங்களை கொடுக்க முடியாமல் போட்டியில் உள்ளது.

சாதாரணமாக ஒரு யூனியன் கவுன்சிலர் கூட அதிமுகவின் இரட்டை நிலையிலும், தேமுதிக சின்னமான முரசு சின்னத்திலும் நிற்கிறார்கள், பாஜக சின்னமான தாமரையிலும் நிற்கிறார்கள். சில இடங்களில் பாமக மாம்பழம் சின்னத்தில் நிற்கிறார்கள். இப்படித்தான் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க அதிமுக கூட்டணியில் பெரும்பாலும் உள்ளது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்த பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதில் பாமக கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் இல்லை என்பதால் சில இடங்களில் மட்டும் அவர்கள் அதிமுக நிற்கும் இடங்களிலும், மாவட்ட பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலில் சில இடங்களில் நிற்கிறார்கள். தேமுதிக பல இடங்களில் மாவட்ட பஞ்சாயத்து உட்பட ஒன்றிய கவுன்சிலர் உட்பட பல பதவிகளில் நிற்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியில் எந்த இடத்தையும் பெற முடியவில்லை.

காரணம் அவர்களுக்கு வலிமையான இடமில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் சில இடங்களில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலில் ஓரிரு இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பார்த்தால் கோவை மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலில் நான்கு இடங்களில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவை எதிர்த்து பாஜக 6 இடங்களில் போட்டியிடுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பாஜக மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. இப்படி கொங்கு மண்டலத்தில் மட்டும் பாஜக கூட்டணி அமையாமல் அதிமுகவை எதிர்த்து போட்டி இருக்கிறது.
இதுகுறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூறும் போது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் இல்லாத ஒரு கட்சி பாரதிய ஜனதா கட்சி, ஆனால் அந்த கட்சி கேட்கும் தொகுதி இடங்களை எங்களால் கொடுக்க முடியவில்லை. இப்பொழுது அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த நிலையை உருவாக்கி விட்டோம். இப்போது அவர்கள் தனித்து தான் போட்டி இடுகிறார்கள். ஓரிரு இடங்களில் மட்டுமே எங்களில் ஆதரவுடன் போட்டியிடுகிறார்கள். எனவே அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. எனவேதான் நாங்கள் கூறுகிறோம் ஹேப்பி ஹேப்பி என்று.. என்றனர்.