இயற்கையோடு வாழும் விலங்கினங்களில் ஒன்று காட்டு யானைகள். மேற்கு தொடர்ச்சி மலையான, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழக, கர்நாடகாவை இணைக்கும் மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள, ஒரு அடர்ந்த வனப்பகுதி இது.
இங்கு புலிகள், யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள் என ஏராளமான விலங்கினங்கள் வாழ்கிறது. இந்த சாலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் ஏராளமாக செல்லும் அப்படிச் செல்லும் அந்த லாரி ஒட்டுனர்கள், உதவியாளர்கள் சாலைகளில் சில இடங்களில் யானைகள் சாப்பிடுவதற்காக கரும்பு கட்டுக்களை போட்டு விட்டுச் செல்வார்கள். இந்த கரும்புகளை சாப்பிட்டு சுவை தெரிந்துகொண்ட பல யானைகள் பெரும்பாலும் சாலையோரமே உலா வந்து கொண்டிருக்கும்.
அப்படித்தான் நேற்று மாலை தனது குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையோரத்தில் நின்று புற்களை மேய்ந்த வண்ணம் இருந்தது. சாலையில் கரும்புலாரி வருகிறதா என்ற எதிர்பார்ப்போடு இருந்தது. நீண்ட நேரமாக கரும்புலாரி வராததால் அந்த நெடுஞ்சாலையில் நின்று கொண்டு எந்த வாகனமும் செல்லாதவாறு சாலை மறியல் செய்தது. யானைகளின் கோரிக்கைகளை யாரும் நிறைவேற்றாததால் பெரும் ஏமாற்றத்துடன் பிளறிக் கொண்டே காட்டுப் படுதிக்குள் சென்றது.
இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனத்துடன் இயக்குமாறும், வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்தி வேடிக்கை பார்ப்பதும், விலங்குகளை புகைப்படம் எடுப்பதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், அது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி வன குற்றம் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.