Skip to main content

‘அரிக்கொம்பனை எங்கே விடுவது’ - வழக்கில் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

'Where to release the captured elephant' - High Court's order in the case

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிக்கொம்பன் சில நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது.

 

அரிக்கொம்பன் யானை ஒரு வழியாக பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் கேரளாவில் 8 பேரை கொன்ற யானையைக் களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து களக்காடு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை மதிக்கெட்டான்சோலையில் விட வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். கேரளாவைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர் தேனி மாவட்டம் மதிக்கெட்டான்சோலை பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட வேண்டும். அது கேரளாவைச் சேர்ந்த பகுதி என்பதாலும், அரிக்கொம்பனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பகுதியாக இருப்பதாலும் அங்கே விடுவது தான் சரியானதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்காகத் தெரிகிறது. தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து யானையைப் பிடித்துள்ளது. எனவே அதனை இங்கே விட வேண்டும் அங்கே விட வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது. யானையின் போக்கு வனத்துறையினருக்குத்தான் தெரியும். அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சில விஷயங்களை அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்த விசயத்தில் நிபுணர்கள் இல்லை. ஆகவே இந்த வழக்கை வனம் மற்றும் வன உயிரிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக” உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்