மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. தண்டனைக்காக வரும் 25- ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் நாகராஜ் மற்றும் புகழேந்தி. 50 வயதைக் கடந்த இவர்கள், தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. செல்போனில் ஆபாச படங்களைக் காண்பிப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இவர்கள் மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அவர்களை விடுதலை செய்தது. போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத்தோடு இந்தப் புகார்கள் அளித்துள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து பாதிப்படைந்த மாணவியின் பெற்றோர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு சாட்சியம் இருந்தாலே போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், இந்த வழக்கில் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாதிடப்பட்டது. எனவே, இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளார். ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளார். வரும் 25- ஆம் தேதி ஆசிரியர்கள் இருவரையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அன்று தண்டனை விவரங்களை அறிவிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.