பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் மாநில தலைவர் நெ.இல.சீதரன் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
“இன்று இந்தியா மற்றும் தமிழகம் முழுக்க பென்ஷனை காப்போம் என்று இந்த போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை ஓய்வுதியர்களும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்திவருகிறோம். இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும். அதேபோல் அது முறையான பென்ஷனாக இருக்க வேண்டும்.
முதியோர் நலம் என்றும் காப்போம் எனும் சொல்லும் மத்திய, மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. முதியோரை பாதுகாப்போம் என்று சொல்லும் மத்திய அரசு முதியவர்களுக்காக முன்பு இரயிலில் இருந்த சிறப்பு சலுகைகளை நீக்கிவிட்டது. அதேபோல், இரண்டு டி.ஏ-க்கள் பறிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மத்திய அரசு செய்கிறது என்றால் முதியோர்களை பாதுகாக்க வேண்டும் அவர்கள் நலம்தான் முக்கியம் என்று அறிக்கையை வெளியிட்டிருக்கும் மாநில அரசு, அதே வேளையில் புதிய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்திவருகிறது.
அதுமட்டுமில்லாமல், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை இன்னும் கொடுக்கப்படவில்லை. இதே நிலைமைதான் மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
மேலும் “இந்த போராட்டம் இதோடு முடிந்துவிடாது, கரோனா முடிந்ததும் அனைவரையும் இணைத்து பெரும் இயக்கமாக மாற்றி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.