மன்சூர் அலிகானை விடுதலை செய்! இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்! என்று திரைப்பட இயக்குநனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயக ஆட்சியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது எல்லோரும் ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்று சொன்னார்கள். வெளிநாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கோ, கருத்துச் சுதந்திரத்திற்கோ ஆளும் அரசுகளோ, மற்ற யாருமோ தடைபோடுவதில்லை. ஒன்றின் மீது நம்முடைய நம்பிக்கை இழக்கும் போது தான் விமர்சனம் அங்கே எழுகிறது. தற்போது தமிழகத்தில் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது. நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.
சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான். உணர்ச்சி மேலிடம் போது கோபம் வெளிப்படுவது இயல்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல் துறை, பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
உடனடியாக கைது செய்ய வேண்டிய அவரை விட்டுவிட்டு மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள். ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் உங்கள் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது. மன்சூர் அலிகான் கைது செய்வதில் காட்டிய அக்கறையை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால் உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ மன்சூர் அலிகான் குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார். ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.