புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, அணவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அதிகமான விவசாயம் உள்ள பகுதி ஆனால் அங்குள்ள குளம், ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து நீர்நிலைகள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் தண்ணீர் இல்லா சூழ்நிலை உருவானது.
அதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. இந்நிலையில் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள இளைஞர்களின் சொந்த சொந்த முயற்சியிலும், சொந்த செலவிலும் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இளைஞர்களின் இந்தப் பணியை நிலத்தடி நீர் உயர்வு குறித்த ஆய்வுக்கு வந்த ஆய்வுக்குழுவினரும் இளைஞர்களை பாராட்டிச் சென்றனர்.
இளைஞர்கள் நீர்நிலைகளை சீரமைத்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்று களப்பணியில் இறங்கிவிட்டாலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு தன்னார்வலர்களும் நிதி வழங்கி இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கொத்தமங்கலத்தில் வியாழக்கிழமை பாலமுருகன் - கார்த்திகா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொத்தமங்கலம் இளைஞர் மன்ற நிர்வாகிகள் மேடைக்கு வரவும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இளைஞர்மன்ற நிர்வாகிகள் மேடைக்கு சென்றபோது மணமக்கள் கையில் வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்து ''எங்கள் குழந்தைகள் வளரும் போது குளத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். அதற்காக இளைஞர்களின் குளம் சீரமைப்பு பணிக்காக இந்த நிதியை கொடுக்கிறோம்'' என்று வழங்கினார்கள்.
இந்த நிகழ்வைப் பார்த்த அங்கு திரண்டிருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தியதுடன் பாராட்டியும் சென்றனர். இது குறித்த கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் கூறும் போது.. நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்ற சீரமைப்பு பணிகளை தொடங்கி 61 நாட்களாக நடக்கிறது. அன்றாட செலவுகளுக்கே சிரமப்பட்டு செய்து வருகிறோம். இந்த நிலையில் முகம் தெரியாத பலரும் நிதி உதவி செய்திருக்கிறார்கள். அது போல மணமக்களும் நிதி வழங்கி இருக்கிறார்கள். இளைஞர் மன்றம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வந்தோம் என்றனர்.