தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதற்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரங்கள் ஆகிவிடும்.
இதனைத் தவிர்க்க சுமார் 393 கோடி செலவில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் தென்தமிழகத்துக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்தே புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கிற இந்தப் பேருந்து நிலையத்தில் மாநகரத்தின் பேருந்துகள், வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் எனச் சொல்லப்படும் தனியார் பேருந்துகள் என ஏறத்தாழ 285 பேருந்துகள் இயக்கப்படுவது பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தி விரைந்து முடிப்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
பொங்கலுக்கு முன்பே திறப்பதற்கு முயன்று பார்க்கலாம். குறிப்பிட்ட தேதியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது. துறைச் செயலாளரும் மாவட்ட அமைச்சரும் பல்வேறு புதிய பணிகளை இந்தப் பேருந்து நிலையத்தில் துவக்க வலியுறுத்தியுள்ளார்கள். அவைகளையும் இணைத்து மேற்கொள்ள இருப்பதால் எவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியுமோ அத்தனை விரைவாக கொண்டு வர முயற்சி செய்கிறோம்” எனக் கூறினார்.