குடித்துவிட்டு போதையில் வகுப்புக்குள் சென்ற மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேரை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் படிப்பதற்கு அனுமதிக்காத நிலையில், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ‘மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மனுதாரர்கள், சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த வீட்டில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.’ என்று கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் விதத்தில் அந்த 8 மாணவர்களும் நேற்று விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்துக்கு வந்தனர். சுத்தம் செய்யும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். அங்கு வந்த பொதுமக்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளாத மாணவர்கள் தரப்பு “காமராஜர் இல்லத்தைச் சுத்தம் செய்தபோதே எங்கள் மனதும் சுத்தமாகிவிட்டது. குறிப்பாக, காமராஜர் சிலையைத் தொட்டுத் துடைத்தபோது உடல் சிலிர்த்தது. மாணவர்களாகிய எங்களின் எதிர்கால நலனில் உயர் நீதிமன்றம் அக்கறை எடுத்துக்கொண்டதை வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாகவே பார்க்கிறோம். கல்விக்கண் திறந்த கர்மவீரர் பிறந்த வீட்டில், அதுவும் சுதந்திர தினத்தன்று சுத்தம் செய்ததை, அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சேவையாகவே கருதுகிறோம்.” என்று பரவசத்தோடு சொன்னது.
மாணவர்களின் கண்களைத் திறக்கக்கூடியவராக இன்றும் இருக்கிறார் காமராஜர்!