சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான ஊசி போட்டதில் குழந்தையின் கை அழுகியதாகவும் அதன் காரணமாக குழந்தையின் கையை அகற்றப்படுவதற்கான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் பேசுகையில், ''மூன்று நாட்களாக பச்சகுழந்தை துடித்தது. இரவு டூட்டி டாக்டர் வராங்க அந்த டாக்டர் கிட்ட குழந்தையோட கை ரெட்டிஷ் ஆகுது சார் என்றேன். இல்லம்மா லைன் எடுத்ததால்தான் அவனுக்கு வலிக்கிறது என்றார். நான் ஒரு ஆயின்மென்ட் எழுதி தரேன் அதை போடுங்க சரியாய் போய்விடும் என்றார். அன்று நைட்டில் இருந்து மறுநாள் காலை வரைக்கும் அந்த ஆயின்மென்ட்டை போடுகிறேன். அதை போட்டு எந்த ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்லை. எந்த ஒரு மாற்றமும் இல்லை. இரண்டு நாளாக கையை நகர்த்த மாட்டேங்கிறான் பாருங்க என்று சொன்னேன் யாருமே பார்க்க மாட்டேன் என்றார்கள். நேற்று மூன்றாவது நாள் எல்லா டாக்டரும் ரவுண்ட்ஸ் வருவார்கள். அந்த டைமில் நான் மருத்துவரிடம் சொன்னேன். இரண்டு கையில்தான் எதைக் கொடுத்தாலும் வாங்குவான். கையை நகர்த்த முடியவில்லை அவனால் என்று சொன்னதற்கு நாங்கள் ஒரு ஸ்கேன் எடுத்துக் கொண்டு வரோம் என காலையில கூட்டிட்டு போனாங்க. அதன் பிறகு எங்களிடம் சொல்லவே இல்லை. ஒரு அரை மணி நேரம் கழித்து உங்க பையனோட கை அழுகி போயிருச்சு கையை ரிமூவ் பண்ணி ஆகணும் வேற ஆப்ஷன் இல்லை என்று சொன்னார்கள்.
நான் கேட்டேன் கை அழுகி போய்விட்டது என்று சொல்கிறீர்களே என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு நிறைய காரணம் இருக்கும்மா.. தலையில் நீர் இருந்ததால் இருக்கலாம், ரொம்ப நாள் முடியாமல் இருந்ததால் இருக்கலாம், இன்ஜெக்ஷன் போட்டு பாக்டீரியா உருவாகி இருக்கலாம் என்றார்கள். பாக்டீரியா இன்ஜெக்ஷனில் ஃபார்ம் ஆவதற்கு யார் சார் காரணம். அந்த சிஸ்டர் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களுடைய அஜாக்கிரதையால் என் பிள்ளையோட கை அழுகும் நிலைமைக்கு ஆகிவிட்டது. நான் கேட்டதற்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இன்னைக்கு என்னோட புள்ளையோட கையே போச்சு. நாலு மணி நேரம் கழிச்சுதான் என்னோட பிள்ளை என்ன மூமென்ட்ல இருக்கும் என்று சொல்வார்கள்.
ஒரு கடையில வாங்குற பழம் மரத்தில் இருக்கிற வரைக்கும் நல்லா இருக்கும். மரத்திலிருந்து பறித்து விட்டால் இரண்டு நாள் தாக்கு பிடிக்கும். மூன்றாவது நாள் அழுகிவிடும். மனுஷன் செத்தால் இரண்டு நாளைக்கு அப்புறம் உடல் அழுக ஆரம்பிக்கும். ஆனால் என் பையன் உயிரோடுதான் இருக்கிறான் கை மட்டும் ஏன் உயிரோடு இல்லை அப்ப நீங்க தப்பான மருந்து கொடுத்து இருக்கீங்க. ஆக மொத்தம் என்னோட பையன வச்சு நீங்க படிச்சிட்டீங்க விளையாடிடீங்க.
வலது கை இல்லனா பாதி வாழ்க்கையே இல்லை. தமிழக அரசு மூன்று நாள்ல பதில் சொல்லும் மூன்று டீம் அனுப்பி இருக்கோம் என்று சொல்கிறார்கள். மூன்று நாட்களில் என்ன பதில் சொல்வீர்கள். எனக்கு இன்னைக்கே பதில் கிடைக்கனும். இருக்கிறவங்களாக இருந்தால் மூன்று மணி நேரத்தில் கண்டுபிடித்து இருப்பீங்க இல்லாதவங்களா இருக்கறதுனால மூணு நாள் எடுத்துக்கறீங்க. தமிழ்நாட்டுல நூறு சதவீதத்தில் 80 சதவீதம் பேர் அடிப்படை பொருளாதார வசதியே இல்லாதவர்கள் தான். அவர்கள் யாரை தேடி போவார்கள் பணம் காசு கேட்கும் ஹாஸ்பிடல் தேடியா போவாங்க. ராம்நாட்டில் எவ்வளவு ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருக்கு அங்கெல்லாம் போக முடியாமையா நான் இங்க வந்து என் புள்ளைய பார்த்தேன்.
நேற்று ஒரு இன்ஸ்பெக்டர் மேடம் ஒருத்தர் இருந்தாங்க அவங்க பேர் ஜெயலட்சுமி. அந்த மேம் என்ன சொல்றாங்க 'ஆக்சிடென்ட் ஆனா கை கால் போறது உண்டுதானே' என்று, எதார்த்தமா நடந்தால் கை கால் போவது வேற அஜாக்கிரதையால் நிகழ்ந்ததற்கு போலீஸ இன்ஸ்பெக்டர் சொல்லுகின்ற வார்த்தையா இது'' என்றார் வேதனையுடன்.