தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அங்கு வரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ராமநாதபுரம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இங்கு வரும் தலைவர்கள் எல்லாம் சரியான முறையில் நடத்தப்படவில்லை. இது வருவதற்குரியது. ஏன் ராமநாதபுரம் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்ற வருத்தத்தை நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். நாங்கள் கட்டுப்பாடோடு வருகிறோம். ஆகையினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய தலைவர் வரும்போது ராமநாதபுரம் மாவட்டத்தினுடைய காவல்துறையின் கண்காணிப்பாளர் ஏன் இதை ஒழுங்குபடுத்தவில்லை. இது வேதனைக்குரிய விஷயம்.
நாங்கள் கட்டுப்பாடோடு இருக்கிறோம். மன நிறைவோடு முடிந்திருக்கிறது. ஒருவேளை கட்டுப்பாடு இல்லாமல் தள்ளுமுள்ளு நடந்திருந்தால் யார் பொறுப்பேற்பது? அங்கங்கே நிற்க வைப்பது; தலைவர்களை சிறை பிடிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நம்முடைய விளையாட்டுதுறை அமைச்சர் வருகிறார். அவர் வரும் பொழுது அவருக்கு என்ன சரியான பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கும் போது அவருடைய கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும். ஏதோ அனாதைகள் வந்து விட்டுப் போவதை வந்து விட்டு போகவா முடியும்'' என தெரிவித்தார்.