தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர். அமைச்சர்கள் விடுவிப்பு, துறைகள் மாற்றம், புதிய அமைச்சர்களுக்கான துறைகள் என பல்வேறு அறிவிப்புகள் நேற்று தொடர் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் உதயநிதி துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'ஒருவேளை நாம் தான் திமுகவோடு தேவையில்லாமல் மல்லுக்கு நிற்கிறோமோ?. திமுக எதிர்ப்பு என்ற நோக்கத்திற்கு மாறாக அதை வாழ்த்தும் அளவுக்கு அதிமுக செயல்பாடு உள்ளது. பேசாமல் அதிமுகவை திமுகவுடன் இணைத்து விட்டால் என்ன?' என கேள்வி எழுப்பியுள்ளார். துணைமுதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உதயநிதிக்கு ரவீந்திரநாத் மட்டுமல்லாது அதிமுகவின் வைகை செல்வனும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.