தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 95 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மீது அந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்திருந்தனர். அதில், “மாணவர்கள் வகுப்பறையில் பேசியதற்காகத் தலைமை ஆசிரியர் மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டியுள்ளார். வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலேயே மாணவர்கள் நான்கு மணி நேரம் இருந்துள்ளனர்.
இதனால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் ஒரு மாணவி உட்பட ஐந்து மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட புகைப்படத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவுடன் சேர்த்து அளித்திருந்தனர். இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர், தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் உடனடியாக விவரம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரை வகுப்பறையில் மற்ற மாணவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியுள்ளார். அந்த மாணவன் வகுப்பறையில் பேசிய மற்ற மாணவர்களில் வாயில் டேப் ஒட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் மாணவர்களின் வாயில் டேப் ஒட்ட வில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.