கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டது. கடந்த 25 நாட்களாக கடைகள் எதுவும் திறக்கவில்லை. ஊரடங்கு அறிவித்த நாளன்று மாலையே குடிமகன்கள் திட்டமிட்டு வாங்கி வைத்த சரக்கு காலியானதால், சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் தற்போது தவிக்கின்றனர். இதனால் கள்ளச்சாராயம் தமிழகத்தில் சக்கைப்போடு போடுகிறது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 20 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் ஊரலைக் கண்டு பிடித்து அழித்துள்ளது காவல்துறை. அதனையும் மீறி பல இடங்களில் சாராய விற்பனை சக்கை போடு போடுகிறது. மலை சாராயம் லிட்டர் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆர்.எஸ் என்கிற கெமிக்கல் சாராயம் 1 லிட்டர் 150 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
பிளாக்கில் பிக்சட் ரேட் என்கிற விலையில் கம்பெனி பாட்டில் சரக்கு விற்கப்படுகிறது. டாஸ்மாக் கடையில் குவாட்டர் 110 ரூபாய், ஆப் 220 ரூபாய், ஒரு புல் 440 ரூபாய். இப்போது கள்ள மார்க்கெட்டில் குவாட்டர் 300 ரூபாய், ஆப் ஆயிரம் ரூபாய், புல் 3 ஆயிரம் ரூபாய் என விற்கிறார்கள். இந்த விலை தந்து பலரும் வாங்குகிறார்கள். இந்த விலையை விட கூடுதலாக தருகிறோம் என சிலர் வாங்க வலம் வருகிறார்கள். பிளாக்கில் விற்பனையாகி வந்ததும் தற்போது காலியானதால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிக்கின்றனர்.
டாஸ்மாக் தொழிற்சங்க பிரமுகர்களிடம் கட்சி நிர்வாகிகள் சிலர் கேட்க, எடுத்து தர வாய்ப்பில்லை என்கிற தகவல் கிடைத்ததால் நொந்துபோய்வுள்ளனர். திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சில முக்கிய அரசியல், அதிகாரப் பிரமுகர்கள், மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளிடம், எலைட் கடைகளில் இருந்தாவது எங்களுக்குச் சரக்கு சப்ளை செய்ய ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.