‘அதிமுகவில் முதல்வர் ரேஸ்!’ என நடப்பு நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டுள்ள நிலையில், விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.
அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ‘அடுத்த முதல்வர் யார்?’ என்பது குறித்து வாய்ஸ் கொடுத்து வரும் நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்.” என்றார்.
ஆனாலும், நக்கீரன் இதழில், நாம் தொடர்ந்து குறிப்பிட்டு வருவது போலவே, ‘நிரந்தர முதல்வர் யார்?’ என, ‘இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.’ தரப்பில், தற்போது வெளிப்படையாகவே, மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
2021-ல் அதிமுக அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் என, அவரது விசுவாசிகள் தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர். ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS’, ‘2021-ன் தமிழக முதல்வர், அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா OPS’, ‘அம்மாவின் ஆசி பெற்ற ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஐயா OPS’, ‘என்றென்றும் மக்களின் முதல்வர் OPS’, புரட்சித்தலைவியின் ஆசிபெற்ற ஒரே முதல்வர் O.P.S.’ என, அந்தப் போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், அவரது இல்லத்தில் ஆதரவு அமைச்சர்கள் ஆலோசனை நடத்துவதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும், தகவல்கள் ‘றெக்கை’ கட்டிப் பறக்கின்றன.
தற்போது, சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பாக அவரது ஆதரவாளர்கள், ‘அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் ஓ.பி.எஸ். வாழ்க!’ என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!’ என்றும், ‘மூன்றாவது முறையாக 2021-ல் வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு. அதற்காக, கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்படவேண்டும்.’ என்று ட்வீட் செய்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களே, நிரந்தர முதல்வர் போஸ்டர் ஒட்டி, ஓ.பன்னீர்செல்வத்தைக் கொண்டாடி வருவதைக்கண்டு, ‘இதுதான் ஓர் வழி நின்று நேர்வழி செல்வதா?’ எனக் கேட்கிறது, எடப்பாடி தரப்பு.
இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகிய இரு தரப்பிலும், வாய்ஸ் கொடுப்பது, போஸ்டர் ஓட்டுவது போன்ற காய் நகர்த்தல்களைப் பார்க்கும்போது, ‘சிறப்பான தரமான சம்பவங்களை எல்லாம் இனிமேல்தான் பார்க்கப் போறீங்க..’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.