Skip to main content

ஆசிரமத்தில் நிகழ்ந்தது என்ன?- விசாரணைக்கு பின் திருப்பூர் காவல் ஆணையர் பேட்டி

Published on 06/10/2022 | Edited on 07/10/2022

 

What happened in the ashram?- Tirupur police commissioner interview

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சில குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் உள்ளது விவேகானந்தா ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் உணவு சாப்பிட்ட சிறுவர்கள் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் 11 வயது கொண்ட 2 சிறுவர்களும், 14  வயது கொண்ட ஒரு சிறுவனும் என மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 10 க்கும் மேற்பட்ட  சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடந்த சம்பவம் குறித்து திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது பேசுகையில், ''15 மாணவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்தார்கள். அதில் ஒரு மாணவர் மட்டும் வெளியில் சென்ற நிலையில் 14 பேர் ஆசிரமத்தில் இருந்தனர். அதில் மாதேஷ், பாபு, சுவாதிஸ் என்ற மூன்று பேரும் உயிரிழந்துள்ளார்கள். நான்காம் தேதி மதியம் சுண்டல் பொரிகடலை வந்துள்ளது.

 

What happened in the ashram?- Tirupur police commissioner interview

 

நான்காம் தேதி இரவு லட்டு கொண்டு வந்துள்ளார்கள். நேற்று காலையில் இந்த ஆசிரமத்தில் இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்ட கடலை குழம்பு எல்லாம் செய்துள்ளார்கள். நேற்று மதியம் ரசம் சாதம் மட்டும் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதனை சிறுவர்கள் எல்லோருக்குமே சாப்பிட முடியவில்லை, எங்களுக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று சொல்லி உணவை அப்படியே குப்பையில் போட்டுவிட்டனர். அதில் மூன்று பேர் மட்டும் ரசத்தை குடித்துள்ளார்கள். இரவும் உணவும் வேண்டாம் என்று சிறுவர்கள் சொல்லிவிட்டார்கள். அனைவருக்கும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்ததால் டோலோ 650 மாத்திரையை பாதி பாதி கொடுத்துள்ளார்கள். ஆனால் காலையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் வாந்தி எடுத்துள்ளான். அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை எல்லோருமே விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சமைத்த ரசம், சாதம், ஊறுகாய் ஆகியவற்றை கலெக்ட் செய்துள்ளார்கள். பயன்படுத்தப்பட்ட குடிநீரை கூட ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் என்னவாக வருகிறது என்பதை பொறுத்துதான் இதில் என்ன நடந்தது என்று சொல்ல முடியும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்