உயிரிழப்பை தடுக்க மது அருந்துவோருக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அவரிடம் வழங்கினர். அப்போது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் வந்து மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களில் டாஸ்மாக் மதுபானங்களை குடித்து விட்டு வாகனங்களில் செல்லும் மது பிரியர்களுக்கு போலீசார் ரூ.10,000 அபராதம் விதிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால், பறிமுதல் செய்த வாகனங்களை போலீசார் ஏலம் விட்டு தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே மது பிரியர்கள் இதை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு டாஸ்மாக் பார்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்திட வேண்டும். அதேபோல் டாஸ்மாக் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிப்பது போல் அதற்கு உடந்தையாக இருக்கும் டாஸ்மாக் மதுவிற்ற ஊழியர்கள், மற்றும் பார் நடத்துபவர்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு செல்பவர்கள் சில நேரம் விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசை மது பிரியர்களுக்கு என்று தனியாக வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்” என ஆறுமுகம் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஆறுமுகம் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் மது சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.