Skip to main content

சேப்பாக்கத்தில் கிரிக்கெட் நடக்குமா, கபடி நடக்குமா... எங்களுக்கு தெரியாது! - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
thamimun ansari



ஐ.பி.எல். போட்டியை நிறுத்தக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி உரிமை மீட்பு குழு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் இணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றன. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி சிறப்பு பேட்டி அளித்தார்.
 

இத்தனை எதிர்ப்புகள், போராட்டங்களைத் தாண்டியம் ஐ.பி.எல். போட்டி நடக்கிறதே?
 

காவிரி உரிமை மீட்பு குழுவும், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் இணைந்து கூட்டு போராட்டமாக ஐ.பி.எல். போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். 5.30 மணிக்கு அண்ணா சாலையில் கூடுவோம். 6 மணியில் இருந்து எங்களின் நகர்வுகள் அமையும். காவல்துறை தடுத்தால் தடுப்பை மீறி செல்ல முயற்சிப்போம்.
 

எங்களைக் கைது செய்தால் கைதாவோம். ஆனாலும் எங்களது போராட்டம் இதோடு நின்றுவிடாது, தொடரும். இது ஒரு பக்கம் இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் எங்களது கோரிக்கைகளை ஏற்று, வேண்டுகோளை ஏற்று களத்தில் இறங்கி கிளர்ச்சி செய்வார்கள். அங்கு கிரிக்கெட் நடக்குமா, கபடி நடக்குமா என்று எங்களுக்கு தெரியாது. அது ரசிகர்களுடைய கையில் இருக்கிறது. பொதுமக்களின் ஆதரவு 99 சதவீதம் இருக்கிறது.
 

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று சிலர் சொல்கிறார்களே?
 

பிழைப்புவாதிகள்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், சுயநலவாதிகளும்தான் இதுபோன்ற கருத்துக்களை முன் வைக்கிறார்கள். மனசாட்சியும், மனிதநேயமும் கொண்டவர்கள் எங்களுடைய கருத்துக்களை ஆதரிக்கிறார்கள். விவசாயிகளுக்காக அரசியல் செய்யாமல், உழைக்கும் மக்களுக்காக அரசியல் செய்யாமல், வேறு யாருக்காக அரசியல் செய்ய முடியும்.
 

சில கட்சிகள், அமைப்புகள் அமைதியாக இருந்திருந்தால் இப்படி கெடுபிடிகள் ஏற்பட்டிருக்காது. உள்ளே சென்று எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். இவர்கள் இப்படி செய்து அலெர்ட் செய்துவிட்டார்கள் என்கிறார்களே?
 

எப்படி இருந்தாலும் இந்த ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு மடங்கு கூடியிருக்கிறது. நாங்கள் கடந்த 3ஆம் தேதியில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசியத்தையும் உலகம் முழுவதும் எடுத்துச்  சென்றுள்ளோம். ஒரு வாரமாக தமிழக மக்களின் உணர்வுகள் நாடெங்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
 

எங்களுடைய நோக்கம் கிரிக்கெட் வேண்டாம் என்பது அல்ல. இந்த நேரத்தில் வேண்டாம் என்பதுதான். ஏனென்றால் காவிரி டெல்டா பகுதிகளில் துக்கமும், சோகமும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. துயரம் மேலிட்டிருக்கும் இந்த நேரத்தில் கோடிகளில் சம்பாதிக்கக் கூடிய ஒரு கிரிக்கெட் தேவையா என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. 
 

சார்ந்த செய்திகள்