கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மெகா போர்வெல் அமைத்து கடலூர் மாவட்டத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுத்து செல்லபடுகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தபட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் எய்யலூர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைசெயலாளர் அன்புமணி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் எய்யலூரில் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எய்யலூர் – காட்டுமன்னார்கோவில் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அதிகாரி இரண்டு நாட்களில் சரிசெய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.