இன்று மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை வண்டியூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதேபோல் அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' இந்த மாநாட்டிற்கு எஸ்டிபிஐ தொண்டர்களை அனுமதிப்பதில் திமுகவிற்கு என்ன கஷ்டம் இருக்கிறது? அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவர்களுக்கு. சகித்துக் கொள்ள முடியவில்லை இன்றைய ஆட்சியாளர்களுக்கு. ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி திருப்பி விட்டு மைதானத்திற்கு வரவேண்டிய எஸ்டிபிஐ தொண்டர்களை வேறு பகுதிக்கு திருப்பி விடுகிறார்கள். பல இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வாகனங்கள் நகர முடியாத சூழலை நாங்கள் பார்த்தோம்.
மூன்று கிலோ மீட்டருக்கு வாகனம் அணிவகுத்து நின்று கொண்டிருந்தது. அவர்களெல்லாம் வந்திருப்பார்களா அல்லது மாட்டார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு இடையூறு செய்யும் ஆட்சியாளர்தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதேபோல அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெற்றது. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 18 கிலோமீட்டருக்கு வாகனத்தை நிறுத்தி விட்டார்கள். பலர் அரங்கத்திற்கு வர முடியவில்லை. இரவு இரண்டு மணி, மூன்று மணிக்கு வந்து மைதானத்தை பார்த்துவிட்டு சென்றார்கள். ஸ்டாலினை பொறுத்தவரைக்கும் கிராமத்தில் சொல்வார்கள் 'சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று போய்விடும்' என்று, நிச்சயமாக இங்கு இருக்கின்ற எஸ்டிபிஐ தொண்டர்கள் வேறு பகுதிக்கு அனுப்பினாலும் அவர்கள் உள்ளம் எப்போதும் உறுதியாக இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது ஸ்டாலின் அவர்களே. வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டும்மல்லாது சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை' என்றார்.