Skip to main content

 7 திரைகளை நீக்கி வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
j


கடலூர் மாவட்டம்  வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளற்பெருமான் என்கின்ற இராமலிங்க வள்ளலார். இவர் சென்னை, கருங்குழி, வடலூர், ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபையை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

 

jo


இதை தொடர்ந்து மாதந்தோறும் தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா  சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று  தொடங்கியது.

 

விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7-30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுகுப்பம் ஆகிய இடங்களிலும் காலை 10 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது.

 

j


இன்று  காலை 06.00 மணிக்கும், 10.00 மணிக்கும் 7  திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பகல் 1.00 மணி, இரவு 7 மணி, 10 மணிக்கும்  22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாளை  காலை 5.30 மணிக்குமாக  6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.  பின்னர் 23-ந்தேதி புதன்கிழமை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. 

 

தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  வடலூரில் மது, மாமிச கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ஜோதி தரிசனத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வள்ளலார் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்- ஏழு திரை நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

Thaipusa Jyoti Darshan in Vadalur- Jyoti Darshan shown with seven screens removed


'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' ஆக வாழ்ந்தவர் ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மருதூர்  கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியை போக்க, சத்தியஞான சபையில் தருமசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கி வருகிறது.

 

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 -ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

 

Thaipusa Jyoti Darshan in Vadalur- Jyoti Darshan shown with seven screens removed

 

பொதுவாக தை மாதம் தவிர்த்த பிற மாத பூச நட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். கண்ணாடிக் கதவுகளில் கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியா சக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை  - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி என கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, ஜோதி தரிசனம் தெரிந்ததை 'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை', 'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை' என கோஷமெழுப்பியபடி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி இன்று அதிகாலை முதல் ஜோதி தரிசனத்தை தரிசித்தனர். தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

 

வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.