டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக தமிழக அரசின் சார்பில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஆண்டு விழாவில் தமிழக அரசின் ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
இதையடுத்து, அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ஜன. 26- ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மூன்று அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. அன்றைய தினமே, மாவட்டங்களில் காட்சிப்படுத்த, முதல்வர் கொடியசைத்து அதன் பயணத்தைத் துவக்கி வைத்தார்.
முதல்கட்டமாக ஈரோடு, கோவை, மதுரையில் இந்த ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று அலங்கார ஊர்திகளும் வெள்ளிக்கிழமை (ஜன. 28) சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டா பகுதியில் வந்தடைந்தன. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கவிதா, எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் மலர்களைத் தூவி அவற்றுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, சுதந்திர போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் என போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்ரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஊர்திகளை கொண்டலாம்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் கண்டு ரசித்தனர். இதையடுத்து, மூன்று அலங்கார ஊர்திகளும் கோவைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டன.