நக்கீரனில் அம்பலப்படுத்திய இந்து அறநிலைத்துறை கூடுதல் இயக்குனர் கவிதா 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயில்களை காக்கவேண்டிய இந்து அறநிலைத்துறை அதிகாரிகளே ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘கடவுளை ஏமாற்றும் அறநிலைத்துறை- சர்வம் சண்முகமணி மயம்’ என்ற தலைப்பில் கடந்த 2017 ஆகஸ்டு 30-ந் தேதி நக்கீரனில் அதிகாரிகளின் பட்டியலோடு அம்பலப்படுத்தினோம். அடுத்த, சில நாட்களிலேயே இந்து அறநிலைத்துறை ஆணையர் சண்முகமோனி ஐ.ஏ.எஸ். பதவியிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போதே, கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிலைக்கட்டத்தலில் தொடர்பு இருக்கிறது என்று அம்பலப்படுத்தினோம்.
அதுமட்டுமல்ல, கடந்த 2018 ஜூலை 25- 27 நேதியிட்ட நக்கீரனில் ‘சிலைக்கடத்தலில் சிக்கும் அறநிலைத்துறை அதிகாரிகள்’ என்ற தலைப்பில் அதிகாரிகளின் பட்டியலுடன் அம்பலப்படுத்தினோம். அதாவது, சிலை கடத்தல் மன்னன் முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, இணை ஆணையர்கள் ஜெயராமன், காவேரி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.
குறிப்பாக, கூடுதல் ஆணையர்கள் திருமகளும் கவிதாவும்தான் சிலைத்தடுப்பு பிரிவு போலீஸின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்கள். இருவரும் ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் எழுதியிருந்தோம். இந்நிலையில்தான், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை செய்வதில் நடந்த முறைகேட்டில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இன்று (31-07 2017) காலை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைத்தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய சிலைக்கடத்தல் பிரிவு போலீஸோ, “சிலைத்திருடன் முத்தையாவின் பினாமிகளுக்கே மீண்டும் சிலை செய்ய ஆர்டர் கொடுக்க கவிதாவுக்கு எந்தெந்த விதங்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கியவர் கவிதா மகன் இயக்குனர் மித்ரன். இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தாலும் சிலை மோசடி மூலம் கவிதா சம்பாதித்த பணம் இதில் கலந்திருக்கிறதா என்கிற ரீதியிலும் எங்களது விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், எந்தெந்த விதங்களில் கவிதாவுக்கு சிலைத்திருடன் முத்தையா உதவியிருக்கிறார் என்பதையும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். அடுத்த கைது திருமகள்தான். தற்போது சென்னையில் கைது செய்யப்பட்ட கவிதாவை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம்” என்கிறார்கள் அதிரடியாக.
இந்த கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் திரட்டிக்கொண்டிருக்கிறார் கூடுதல் ஆணையர் திருமகள்.
அதிகாரிகளை கைது செய்வது மட்டுமல்ல, சிலைத்திருட்டு மற்றும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவரது மகன் விஜயக்குமார் என்கிற விஜய் வரை விசாரித்தால்தான் சிலைக்கடத்தலில் நடக்கும் மாபெறும் ஊழல்களும், மோசடிகளும் வெளிவரும்.