சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி மகாபலிபுரத்தில் இந்திய பிரதமர் நரந்திரமோடி மற்றும் சீன அதிபர் தோழர் ஜின்பிங் சந்திப்பு வரவேற்கதக்கது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை மீட்க தமிழக அரசு ஒரு ஆணையத்தை அமைத்து மீட்க வேண்டும். பிரதமர் மோடி - சீன அதிபர் தமிழகத்தில் மகாபலிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சியால் எல்லையோர சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த சந்திப்புத உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் தமிழ் சமூகத்தின் தொன்மையை பறை சாற்றுகின்றது. 5 கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வாய்வுக்கு மத்திய அரசை நம்பி அகழ்வாய்வு செய்யக்கூடாது. நிதியை தமிழக அரசே ஒதுக்க வேண்டும். கீழடியிடில் கிடைத்த பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் என்எம்ஆர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தலித் சமூக மாணவர்களிடம் கட்டாய கட்டண வசூல் செய்யக்கூடாது. இங்கு படிக்கும் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு திட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. இதனை கைவிடவேண்டும். அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பிறகும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் நிதி முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்,
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வருகிற 13-ம் தேதி கடலூரில் விசிக சார்பில் உலக சாதனை நிகழ்வாக பனைவிதைகளை கொண்டு எனது முக வடிவத்திலும் அம்பேத்கார் முகவடிவத்திலும் பனைமுகம், திருமுகம் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுகிறது. இதில் 10 ஆயிரம் பனை விதைகளை நடும் திட்டமும், 3 ஆயிரம் இளைஞர்களை கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பை பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் பணியிடங்களுக்கு தலித், சிறுபான்மையினர், பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நெய்வேலி கங்கைகொண்டான் பகுதியில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த குற்றவாளியை தமிழக அரசு விரைந்து கைது செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிக்கு தருவது போன்று கடலூர், அரியலூர் மாவட்டங்களில் வாய்க்கால்களை தூர்வாரிட சிறப்பு நிதியை தமிழக அரசு அளிக்க வேண்டும். ராதாபுரம் தொகுதியில் நடந்த முறைகேட்டைப் போலவே காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் நடந்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதைப் போலவே காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என நம்புகிறேன் என கூறினார்.
இவருடன் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் அறவாழி, மாநில நிர்வாகிகள் தாமரைசெல்வன், செல்லப்பன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.