இன்று (18/06/2022) காலை 07.00 மணியளவில் காந்திநகரில் உள்ள தனது தாயார் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னின் 100- வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு மாலை அணிவித்து, பாதங்களுக்குப் பாத பூஜை செய்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், அவரது காலில் விழுந்தும் ஆசி பெற்றார். அத்துடன், வீட்டில் உள்ள பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபட்டார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11.00 மணியளவில் வதோதரா மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், சுமார் 21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றவிருக்கிறார்.
பிரதமரின் தாயாரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மற்றும் அவரது தாயாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தங்களின் தயார் 100 ஆவது வயதில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாயார் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன். தாங்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் என் தாயாரின் உடல்நலனை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவுகூருகிறேன். இந்த சிறப்பான நன்னாளில் தங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.