வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையைப் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிடக் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் இன்று மன்னார் வளைகுடா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கடல் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கியதால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளை மீட்கும் பணியை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.