![wedding with traditional dances](http://image.nakkheeran.in/cdn/farfuture/JJOnlNq_R3ehDxzxTrtKfOikWvQo2qndT0fD5JwY0xY/1613395428/sites/default/files/inline-images/aadal-padal.jpg)
தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் அதிகம் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணம், இந்த கரோனாவால், எத்தனையோ தொழில்கள் அழிவின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி தொழில் செய்யும் பல கலைஞா்களில் நாம் தவறவிட்டவா்களும், கவனிக்காமல் போனவா்களுமான தெருக்கூத்துக் கலைஞா்கள், கோவில் விழாக்களில் மக்களை மகிழ்வித்தவா்கள், ஆடலும், பாடலும் நடன நிகழ்ச்சி கலைஞா்கள் என்று வெளியுலகிற்குத் தெரியாத பன்முகத் தன்மை கொண்ட கலைஞா்கள், இந்த கரோனாவால் காணாமல் போய்விட்டனா்.
வருமானம் என்பது, தான் நம்பி இருக்கும் தொழிலைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு, மக்கள் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்தில் வெளிப்பட வேண்டும் என்று தன்னைத் தானே வருத்திக்கொண்ட கலைஞா்களில் பலா், வறுமையின் காரணமாக, பல இடங்களில் கட்டிடத் தொழில்களுக்குச் சென்றுவிட்டனா். ஆனால், இன்னும் ஒரு சிலா் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியை, திருமண நிகழ்வுகளில் நடத்த அனுமதிபெற்று தங்களுடைய திறமையைக் காட்ட ஆரம்பித்துள்ளனா்.
அப்படி கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில், இன்று ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் நடனம் ஆடி பொதுமக்களையும், மணமக்களையும் மகிழ்வித்தனா். தற்போது, இவா்கள் இந்நிகழ்ச்சியை நடத்த மிகக் குறைந்த தொகையை நேரடியாக திருமண உறவினா்களிடம் பேசிவிட்டு அதன்பின் தங்களுடைய திறமைகளை வெளியே கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளனா்.