ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்கோப்டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் 726 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான பாவு நூல் கூட்டுறவு சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது. இதில் பெட்ஷீட் உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டிற்கான நெசவு கூலியானது ஆரம்ப காலத்தில் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்தது.
சென்ற 40 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வந்த நிலையில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு வாரம் ஒரு முறை சனிக்கிழமையன்று மட்டுமே கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மாற்றி முன்பு போலவே தினம்தோறும் அல்லது வாரம் இருமுறை வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதேபோல கூலி தொகை ரூ. பாய் 1500க்கு மேல் இருந்தால் நெசவாளர்களின் வங்கி கணக்கில் மட்டுமே வங்கியில் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. வங்கியில் இருந்து பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் கூட்டுறவு சங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர் சங்கமான சென்கோப்டெக்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் நேற்று மனு கொடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல், கஞ்சித்தொட்டி திறப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
.