தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு மகன் புண்ணியமூர்த்தி (வயது 29). சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் கோட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றினார்.
இவர் மதுரை செல்லும் பேருந்தில் நடத்துனராக பணி செய்வதால் நேற்று அதிகாலை பேருந்துக்கு செல்ல தயாராவதற்காக பணிமனைக்குள் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த விரியன் பாம்பு புண்ணியமூர்த்தி காலில் கடித்துள்ளது. உடனே சக ஊழியர்கள் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை பணிமனை ஊழியர்கள் அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊழிர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறும் போது..
போக்குவரத்து பணிமனையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் தான் இப்படி நடக்கிறது. பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்யவே அச்சமாக உள்ளது. இதேபோலதான் பல பணிமனைகள் உள்ளது என்றனர்.