
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை (09/03/2025) திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தேசிய அளவில் எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது தொடர்பாகவும், பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து நிதிப்பகிர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களை இணைத்து களம் காண்போம்; தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்; தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம்; தமிழக தொகுதிகளை பாதுகாக்கும் முயற்சியில் முதல்வரின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்; ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைப்போம்; ஒருங்கிணைக்கும் பணியை திமுக எம்பிக்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மேற்கொள்வர்' என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.