காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் பிறகு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “95 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது; எஞ்சியுள்ள பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் முன்பாக தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்படும். நடப்பாண்டில் டெல்டாவில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5.38 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி, 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். கடந்த ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியதை போலவே இந்தாண்டும் செய்து காட்டுவோம். மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” என்றார்.