தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா ஆண்கள் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டடத்துக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம். கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க 'திராவிடர் இல்லம்' நிறுவினார் நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார். கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி. ராஜா அவர்கள். அவரது பெயரில் ஆதி திராவிட மாணவர்கள் தங்கிப் பயில, 1961-இல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர்.
அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன். மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து. கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்” எனத் தெரிவித்துள்ளார்.