கோயிலில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை நகைகளை உருக்கும் பணிகளில் சிறிய தவறு கூட நிகழாது என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 199 வது பிறந்தநாள் வரும் 5-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிற நிலையில், சென்னை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்த இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ததோடு வழிபாடும் நடத்தினார். இந்நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ''வடலூரில் 72 ஏக்கரில் வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்'' எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''கோவில்களில் காணிக்கையாக வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகள் உருக்கும் பணி வெளிப்படையாக நடைபெறும். ஆகவே இதில் எந்த தவறும் நிகழாது. இறைவனுக்கு தந்த அந்த பொருட்களை இறைவனுக்கே பயன்படுத்துவதுதான் இந்த திட்டம். மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் இம்மியளவு கூட தவறு நடைபெறுவதற்குத் தமிழ்நாடு முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறையும் அனுமதிக்காது. ஐயப்பன் மீது சாட்சியாக, ஐயப்பன் மீது சத்தியமிட்டுச் சொல்லுகிறோம் ஒரு சிறு தவறு கூட இந்த நகைகளை உருக்குகின்ற பணியில் நிகழாது நிகழாது'' என்றார்.