திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு உதவி செய்ய கத்தார் நாட்டில் இருந்து வேல்முருகன் என்ற தமிழர் தன் குடும்பத்துடன் ஓடிவந்து கிராமத்து மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
மதுரையை பிறப்பிடமாகக் கொண்டு சென்னையில் வசித்து வருபவர் வேல்முருகன். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டுதோறும் தாயகம் திரும்பும் வேல்முருகன் அரசுப் பள்ளி மற்றும் ஏழைக் பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டி வந்தார். சென்னை அதன் சுற்றுப் பகுதிகளில் மட்டுமே கல்வி உதவிகளை செய்து வந்த வேல்முருகன் தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்துக்கு சென்று இந்த ஆண்டு அப் பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.
யூடியூப் மூலம் பள்ளிகளை தேடிக்கொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள மேல கோவில்பட்டி ராணுவ கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி அவரை ஈர்த்துள்ளது. உடனடியாக பள்ளியை தொடர்பு கொண்ட வேல்முருகன் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக கத்தாரில் இருந்து நேரே சென்னை வந்த அவர் தன் மனைவி திரிபுர சுந்தரி தன் மகன் விக்னேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஸ்கூல் பேக் நோட்டுகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாங்கிக்கொண்டு பள்ளி வந்தடைந்தார்.
வேல்முருகன் குடும்பத்தை பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியம்மாள் தலைமையில் பிரமுகர்கள் ஜான், ஜெகன் மற்றும் பெற்றோர்கள் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி விட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர் வேல்முருகன் குடும்பத்தினர்.