கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளராக இருப்பவர் சக்தி. இவர் கடந்த சில தினங்களாக துண்டு பிரசுரம் ஒன்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகித்து வந்துள்ளார். அந்த நோட்டீஸில், ‘நலிவுற்ற நிலையிலிருக்கும் இந்து வியாபாரிகளை காப்பாற்ற, வரும் தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்குங்கள்’ என அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களை விநியோகம் செய்தது மட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை செய்து, சக்தியை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி கைது செய்யப்பட்டதை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தில் கூடினர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு நின்றிருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெற்றி என்பவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.