தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்குக் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22/02/2022) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 132 நகராட்சிகளிலும், அ.தி.மு.க. 3 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், தி.மு.க. கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அ.தி.மு.க. 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கடந்த ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ்தான் இந்த வெற்றி. வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்பு அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதே தி.மு.க.வின் குறிக்கோள், எனவே அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியை யாரும் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம்.
தி.மு.க.வினர் எந்த புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து எந்த நேரத்திலும் மக்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்; தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.