தர்மபுரி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தையும், இளைஞரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ராமகவுண்டஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குழந்தை மித்ராவுக்கு காய்ச்சல் வந்தது. பெற்றோர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏரியூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, நவ. 1ம் தேதி இரவு மீண்டும் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
குழந்தைக்கு இரவு உணவு கொடுத்துவிட்டு, காய்ச்சலுக்கு உண்டான மருந்து, மாத்திரைகளையும் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பிறகு சிறுமியும் தூங்கிவிட்டாள். சனிக்கிழமை (நவ. 2) காலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தை மித்ரா மூச்சு பேச்சின்றி கிடந்தாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டது தெரிய வந்தது. சிறுமிக்கு இரவில் கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பென்னாகரம் அருகே உள்ள மாரண்டஹள்ளி குண்டப்பனகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகன் ராஜன் (35). சொந்தமாக மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அதன்பிறகு தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்தும் பின்னர் தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து ராஜனின் பெற்றோர் அவரை சேலத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜன் உயிரிழந்தார். பென்னாகரம் வட்டாரத்தில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து சிறுமியும், வாலிபரும் இறந்தது அந்தப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.