காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளி்யிட்டுள்ள அறிக்கை: ’’காவிரி சிக்கல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நீதியின் பெயரால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியென்றே இதைக் கூறவேண்டும். பார்வைக் குறைபாடுள்ள ஒரு கண்ணுக்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் போனால் அவர் இன்னொரு கண்ணையும் குருடாக்கி அனுப்பிய கதையாக இது இருக்கிறது. இந்தத் தீர்ப்பை தமிழக அரசு ஏற்கக்கூடது. உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
காவிரியில் தமிழகத்துக்கு 566 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமென்று நடுவர் மன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தமக்கு 456 டி.எம்.சி. நீர் தேவையென கர்னாடகம் வற்புறுத்தி வந்தது. தமிழகத்துக்கு 192 டிஎம்சியும் கர்னாடகத்துக்கு 270 டிஎம்சியும் ஒதுக்கி நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்தது. இப்போது தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி தண்ணீரை எடுத்து கர்னாடகத்துக்கு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சி வழங்கவேண்டும் என்று சொன்ன நடுவர்மன்றம் 2007 இறுதித் தீர்ப்பில் அதை 192 டிஎம்சியாகக் குறைத்துவிட்டதே எனத் தமிழகம் கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது அதையும் குறைத்து 177.25 டிஎம்சியாக ஆக்கிவிட்டது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டை மத்திய அரசுதான் வஞ்சிக்கிறது நீதித்துறையாவது நமக்கு நியாயம் வழங்கும் என எதிர்பார்த்தோம் அந்த எண்ணத்திலும் இப்போது இடி விழுந்துவிட்டது.
தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் உயிரைப்பற்றிக் கவலப்படுவதைவிட பெங்களூர் உலகத்தரம் வாய்ந்த நகரம் என்று சான்றிதழ் வழங்குவதற்கே நீதிமன்றம் முன்னுரிமை அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்வது உண்மையென்றால் காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட அவரைப்போலவே உறுதியோடு இன்றைய முதல்வரும் போராடவேண்டும்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் உள்ல நெல் வயல்களையெல்லாம் எண்ணெய் வயல்களாக்குவதற்கு மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. அதற்கு ஒத்தாசை செய்வதாக இந்தத் தீர்ப்பு அமைந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்து தமிழகத்தின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவேண்டும். அதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டவேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’