காவிரி சிக்கல் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை: ’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் கெடுவை மதிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்காத தலைமை நீதிபதி, தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் விதமாகாகக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
“நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறவில்லை” என கூறியுள்ள தலைமை நீதிபதி, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் உள்ளே அடங்கிவிட்டது எனக் கூறியுள்ளார். இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் , காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டுமென்ற காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை வெளிப்படையாக சொல்லாமலேயே உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பங்கிலிருந்து 14.75 ஜிவிசி தண்ணீரை எடுத்து கர்நாடகத்தின் கணக்கில் சேர்த்த உச்சநீதிமன்றம் இப்போது மேலும் ஒரு அதிர்ச்சியைத் தமிழகத்துக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இது நீதியின் பெயரால் செய்யப்பட்டுள்ள அநீதி தவிர வேறில்லை.
மே மூன்றாம் தேதிக்குள் மத்திய அரசு செயல் திட்டத்துக்கான வரைவை சமர்பிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியள்ளது. மூன்று மாதம் அவகாசம் கேட்ட மத்திய அரசுக்கு அதைவிடவும் கூடுதலான அவகாசத்தை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் முன்வந்திருப்பதாகவே இதைக்கருதத் தோன்றுகிறது.
தமிழக மக்கள் மோடி அரசின் வஞ்சகத்தால் கொதிப்படைந்து போய் உள்ளனர். ஏறத்தாழ ஒருமாத காலமாகத் தமிழகம் முழுவதும் போர்க் கோலம் பூண்டு நிற்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நீதிமன்றத்தின் மூலமாகவும் நமக்கு நியாயம் கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையே ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தமிழக மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய அதிமுக அரசோ வாய்மூடி மவுனம் காக்கிறது.
காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை மீட்டெடுக்க இனி தமிழக அரசை நம்பிப் பயனில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. எனவே, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறவழியில் இன்னும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே நமது உரிமையைப் பெறமுடியும்.
காவிரி மீட்பு பயணத்தை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை திமுக தலைமையிலான கட்சிகள் கூடி முடிவு செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’