சேலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்துள்ள அதிமுக பிரமுகர் இளங்கோவன் உள்ளிட்ட குத்தகைதாரர்களுக்கு, 7 நாள்களுக்குள் பாக்கியை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், கட்டண கழிப்பறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், பொருள்கள் பாதுகாப்பறை ஆகியவற்றை குத்தகை எடுத்தவர்கள் அதற்கான குத்தகைத் தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து நிலுவை குத்தகைத் தொகையை வசூலிக்க ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்துள்ள அதிமுக பிரமுகர் இளங்கோவன், 2.17 கோடி ரூபாயும், பேருந்துகள் நுழைவுக் கட்டணம் வசூல் பணிகளை ஒப்பந்தம் எடுத்த வகையில் 11.83 லட்சம் ரூபாயும், பொருள்கள் பாதுகாப்பறை இனத்தில் 3.25 லட்சம் ரூபாயும் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்.
அதேபோல், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள புவனேஸ்வரி என்பவர் 85.61 லட்சம் ரூபாயும், கடைகளை வாடகைக்கு எடுத்த வகையில் 29 லட்சம் ரூபாயும் நிலுவை வைத்துள்ளார். இவர்கள் தவிர, மேலும் பத்து பேர் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்குரிய தொகையைச் செலுத்தாமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூலம் மாநகராட்சிக்கு மொத்தம் 4.51 கோடி ரூபாய் குத்தகை மற்றும் வாடகை தொகை நிலுவையில் உள்ளது. இதையடுத்து, நிலுவைத் தொகையை 7 நாள்களுக்குள் செலுத்துமாறு குத்தகைதாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தவறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.