குற்றாலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேற்று சென்னையில் டிடிவியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் அணி தாவலாம் என்ற கருத்து நிலவியது. இதனை அடுத்து அவர்களை பாதுக்காக்கும் பொருட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்திலுள்ள தனக்கு வேண்டியவரும், மாநில ஜெ பேரவை துணைச்செயலாளரான இசைக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இசக்கி சுப்பையா முன்னாள் அதிமுகவின் அம்பை தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். இவர் தற்போது தினகரன் அணிக்கு தாவி மாநில பொறுப்பு வகிக்கிறார். இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் சம்பந்தியும் ஆவார். இவருக்கு சொந்தமான சகல வசதிகளையும் கொண்ட ரிசார்ட் பங்களா நெல்லை குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ளது. தற்போது இவர்கள் வருவார்கள் என்பதற்காக சில அறைகள் ஒதுக்கிவைக்கப்பட்டது. இதனிடையே 18 எம்.எல்.ஏக்கள் இங்கு வரவிருக்கிறார்கள் என்ற செய்தியால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அனைவரின் கவனமும் அந்த ரிசார்டின் மீது பதிந்தது. நேற்று இரவு வரை யாரும் வரவில்லை.
இதனை அடுத்து நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன், அவருடன் எம்.எல்.ஏ மாரியப்பன் என்கின்ற கென்னடி, சாத்தூர் சுப்ரமணியம், பெரியகுளம் கதிர்காமம், காப்புரெட்டிபட்டி பழனியப்பன் என மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் வந்தனர். அதனை அடுத்து சில எம்.எல்.ஏக்களும் வருவார்கள் என எதிர்பாக்கப்பட்டது. இவர்கள் அந்த ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நிறைவுற்ற நிலையில் இன்று காலை ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட செல்வார்கள் என தகவல்கள் வந்துள்ளன.