பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் கொடூர வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை ஆசை வார்த்தை சொல்லி தனியே வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகி நிர்மலா முன்னிலை வகித்தார்.
போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பறை அடித்து பாட்டு பாடினார்கள். அந்த அமைப்பை சேர்ந்த பாடகர் கோவன், லதா, சத்யா, சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் பங்கேற்று பாட்டு பாடினர். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது. எனவே, அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிளக்ஸ் பேனரில் உள்ள கைதான 4 பேரின் உருவப் படத்தின்மீது துடைப்பத்தாலும், செருப்பாலும் மாறி, மாறி அடித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இவர்களை வெளியே திரியவிடுங்கள். மக்கள் பார்த்து கொள்வார்கள். போலீசும், இந்த அரசும் குற்றவாளிகளை காப்பாற்றவே முனைகிறது. மேலும் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை என கூறுவதும் பொய். பாலியல் குற்றவாளிகளை தூக்கில் போடு. அதிகாரத்தை மக்களை கையில் எடுப்போம். ஆபாச இணைய தளங்களை அரசு தடை செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாக பேசினர்.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திராவிடமணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ஆதிநாராயணமூர்த்தி, பெரியார் திராவிடர் கழக செயலாளர் கமலக்கண்ணன், மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.