Skip to main content

''நாங்கள் கேட்பது உதவியல்ல காப்பிரைட் ராயல்டி''-மீண்டும் சர்ச்சையில் 'ஜெய் பீம்'

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

'' What we are asking for is not help 'Copyright royalty' - 'Jai Bhim' in controversy again

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெய் பீம்’. பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது வரை உலக அரங்கில் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அதேபோல் சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. ஆதரவு கருத்துக்களை எப்படி இத்திரைப்படம் பெற்றதோ அதேவகையில் திரைப்படத்திலிருந்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்த, எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து உதவிகள் கிடைத்தன.

 

'' What we are asking for is not help 'Copyright royalty' - 'Jai Bhim' in controversy again

 

இந்நிலையில் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எங்களை படக்குழுவினர் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என கொளஞ்சியப்பன் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞருடன் கொளஞ்சியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''93ல் நடந்த கதை இது. ராஜாக்கண்ணு என்பவர் எனது மாமா. ஆச்சி என்பது எனது அம்மா. 93ல் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ திருட்டு போயிருந்தது. அந்த வழக்கில் நாங்கள் அடிபடவில்லை. ராஜாக்கண்ணு குடும்பத்தை போலீசார் விசாரிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாங்கள் வேறு ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து 'உங்கள் வீட்டுக்கு யார் யார் விருந்தாளிகள் வந்தார்கள்' என கேட்டதில், 'எங்க அக்கா வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்தார்கள்' என சொல்லி உள்ளார்கள். மேலும் அவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் போலீசார் பந்தநல்லூரில் இருந்த எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என்னை, எனது அம்மாவை, எனது அண்ணனை என மூன்று பேரையும் அடித்து வேனில் ஏற்றிக்கொண்டு கம்மாபுரம் கொண்டுவந்தார்கள். கொண்டுவந்து எங்களை சித்திரவதை செய்தார்கள். எனது அம்மாவையும் எனது அண்ணனையும் கொச்சையாக நடத்தினார்கள். அடி தாங்க முடியாமல் நாங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தோம். 7:30 மணி அளவிற்கு எங்க அண்ணன், எங்க மாமா ராஜாக்கண்ணு, இன்னொரு மாமா என மூன்று பேரையும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துவிட்டு என்னையும், எங்க அம்மாவையும் ஊருக்கு பஸ் ஏற்றி விட்டார்கள். நாங்கள் ஊருக்கு போய் விட்டோம். அதன் பிறகு ராஜாக்கண்ணு தப்பி ஓடிவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அவரை சாகடித்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லிவிட்டார்கள். இது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் போடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன், பாலகிருஷ்ணன் அவங்க எல்லாம் இந்த கேஸை நடத்தினார்கள். நாங்களும் கோர்ட்டில் சாட்சி சொன்னோம்.

 

அதன் பிறகு 'ஜெய்பீம்' என்ற திரைப்படத்தை எங்கள் கதையை வைத்து எடுத்தார்கள். ஆனால் ஜெய்பீம் படக்குழுவினர் எங்களுக்கென்று என்ன செய்தார்கள்?. எங்கள் கதைதானே.. எங்க அண்ணன், எங்க அம்மாவையும் கொச்சையாகவே நடத்தினார்களே... எங்களுக்கு படிப்பறிவு இல்லை. எங்களை ஆதரிக்க யாரும் இல்லை. அன்னைக்கு எல்லாமே செய்துவிட்டு இன்னைக்கு நாங்கள் அனாதையாக நிற்கிறோம். போட்டுக்கொள்ள செருப்பு கூட இல்லாமல் அனாதையாக நிற்கிறோம். எங்களைத் தேடி வருவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. ஆதாரத்தை எல்லாம் எனது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளேன். ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு எப்படி உதவி செய்தார்களோ அது மாதிரி எங்களுக்கும் உதவி பண்ண வேண்டும்'' எனக்கேட்டார்.

 

jj

 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கொளஞ்சியப்பனின் வழக்கறிஞர்,  ''இவர்கள் கேட்பது உதவி அல்ல ராயல்டி. காவல்துறை கொட்டடி சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்களில் இவர் குடும்பத்தில் 4 பேர். இவருடைய அம்மா ஆச்சி, இவரது அண்ணன் குள்ளன், மாமா கோவிந்தராஜ், பெரிய மாமா ராஜாக்கண்ணு, ராஜாக்கண்ணுடைய மனைவி பார்வதியம்மாள். இவர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இயக்குநர் ஞானவேல் இவரை சந்தித்து இந்த கஸ்டடி சம்பவத்தை, போலீஸ் ஸ்டேஷனில் நடந்தவற்றை படமாக எடுக்கப் போகிறோம், நீங்கள் உண்மையாக அங்கு என்ன நடந்ததோ அதை எல்லாம் சொல்லுங்கள் என கேட்டு வாங்கி உள்ளார். மேலும் இந்த கதைக்கான உரிமைக்காக ஒரு கோடி ரூபாயை உங்களுக்கு அட்வான்ஸாக கொடுக்கிறோம். அதேபோல் இந்த படத்தில் வரும் வருவாயில் 20 சதவீதத்தை உங்களுக்கு கொடுக்கிறோம் என இவரிடம் நடந்த சம்பவங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டதோடு, இவர் நோட்டில் எழுதி வைத்திருந்த சம்பவங்கள் தொடர்பான குறிப்பை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு இவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு இவர்கள் அதிர்ச்சியடைந்து நம்முடைய கதையை இவர்கள் சினிமாவாக எடுத்துள்ளார்கள் அதுவும் நம்முடைய அனுமதி இல்லாமல் என்பதை தெரிந்துகொண்டனர். காப்பிரைட் சட்டத்தின்படி கதைக்கான ஆத்தர் கிட்ட பர்மிஷனை பெற எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை வாங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்தை இவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அனுமதி கடிதம் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. ஒரு பட்டியல் சமுதாயத்தின் அறிவு சொத்தை திருடி யாரும் பணம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது, சட்டம் அதை அனுமதிக்காது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறோம். தமிழக காவல்துறை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். அப்படி எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் எங்களது உரிமையை நிலைநாட்டுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்