நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக, திமுக, அ,ம,மு,க. மக்கள் நீதிமையம், நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் பல அணிகளாக களம் காண இருக்கும் நிலையில் அவர்களை மிஞ்சும் வகையில் விவசாய சங்கங்களும், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களும் என பல அணிகளாக பிரிந்து ஆளுக்கு தலா 100 வேட்பாளர்களை களமிறக்கப்போகிறோம் என அறிவித்திருப்பது டெல்டா தேர்தல்களத்தில் பரபரப்பாகியுள்ளது.
கடந்த வாரம் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை நாகை மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 100 பேர் வீதம் வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் களத்தை போராட்ட களமாக மாற்ற திட்டமிட்டிக்கிறோம் என முதற்கட்ட வேட்பாளர்கள் 11 பேரை மயிலாடுதுறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அதனை தொடர்ந்து தற்போது காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கமோ சில கோரிக்கைகளை துணை ஆட்சியரிடம் கொடுத்து அதை நிறைவேற்றவில்லை எனில் எங்களின் சார்பில் நூறு வேட்பாளர்களை களமிறக்கி போராட்டகளமாக மாற்றுவோம் என கூறியுள்ளனர்.
என்ன கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களிடமே விசாரித்தோம், " தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட 2017 −18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை எந்த முறைகேடும் இல்லாமல் விரைவில் வழங்கப்பட வேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கரும்புக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். அரசு சர்க்கரை ஆலையான என், பி,கே,ஆர்,ஆர் ஆலையை மீண்டும் இயக்க செய்திடவேண்டும். ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மையங்களில் தேங்கி கிடக்கின்றன இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட இருப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளின் பெயரால் அரசு அறிவிக்கும் அனைத்து மானியங்களையும் ரத்து செய்து நெல் விலையை குவிண்டாலுக்கு 2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தலுக்குள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் விவசாயிகளை வேட்பாளர்களாக நிறுத்தி போராட்ட களமாக மாற்றுவோம் என்றனர்.
இதேபோல் தான் கடந்த வாரம் மயிலாடுதுறையில் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் நாசகார பிரச்சனையை மையமாக வைத்து, மூன்று தொகுதிகளிலும் 300 வேட்பாளர்களை இறக்கி தேர்தலை போராட்டக் களமாக மாற்றுவோம், அதன்மூலம் விழிப்புணர்வு அடைய செய்வோம் என வேட்பாளர்களை அறிவித்தனர்.
இந்த அறிவிப்புகள் அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடையவே வைத்திருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற தொகுதிகளை விட டெல்டா மாவட்ட தொகுதிகளில் விவசாய,மீனவ பிரச்சனையே பிரதானமாக இருக்கும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.