மருத்துவர் ராமதாஸின் பாமகவும், நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக வும் தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமான கட்சி. விஜயகாந்த்தின் கட்சி ஆரம்பித்தபின்பு தான் வடதமிழகத்தில் பாமகவின் செல்வாக்கு பெரும் சரிவை சந்தித்தது. பாமகவில் இருந்த இளைஞர் பட்டாளம் அப்படியே தேமுதிகவுக்கு தாவியது.
இது பாமக நிறுவனரையும், அக்கட்சியினரை கடுமையாக கோபமடைய செய்தது. இதனால் தேமுதிகவை கடுமையாக எதிர்க்க தொடங்கியது பாமக. வடமாவட்டத்தில் தேமுதிகவின் செல்வாக்கை குறைக்க, தேமுதிகவில் உள்ள தன் சாதி இளைஞர்களை குறிவைத்து பாமக களம்மிறங்கி அதில் 70 சதவித வெற்றியை பெற்றது. அக்கட்சியில் இருந்த தன் சாதி இளைஞர்களை இழுத்தது, புதியதாக யாரும் அந்த கட்சிக்குள் போய் சேரவிடாமல் பார்த்துக்கொண்டது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமைத்த அதிமுக தலைமையிலான கூட்டணியில் எதிர்எதிர் கட்சிகளான பாமக, தேமுதிக இடம் பிடித்தது. அப்போதே பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் முரண்டுபட்டே இருந்தன. இரண்டு கட்சிகளின் தலைமைகளைப்போலவே, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து செயல்படவில்லை.
தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு தந்த முக்கியத்தை கூட தேமுதிகவுக்கு அதிமுக தலைவர்கள் தரவில்லை. அதோடு, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாமக, சுயேட்சை வேட்பாளர்களை களம்மிறக்கியது. அதிமுகவும் அதற்கு சப்போட் செய்தது என்கிற குற்றச்சாட்டை தேமுதிக மாவட்ட நிர்வாகிகள், விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிடம் தெரிவித்தனர். தேர்தல் முடியட்டும் பார்த்துக்கலாம் எனச்சொல்லினர்.
வாக்குஎண்ணிக்கை முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். போட்டியிட்ட சில இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று ஒன்றிய கவுன்சிலர்களாக உள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் 2 கவுன்சிலர்கள் தேமுதிகவை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்த செங்கம் ஒன்றிய சேர்மன் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கி தந்துள்ளது அதிமுக தலைமை. இந்த ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் திமுக 8, காங்கிரஸ் 1, சிபிஎம் 1 என இந்த கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4, பாமக 3, தேமுதிக 2 என 9 இடங்களில் மட்டும்மே வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். சுயேட்சைகள் முடிவே சேர்மன் யார் என்பதை முடிவு செய்யும். சுயேட்சைகளிடம் பாமக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதேபோல் திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதேபோல் பாமகவுக்கு தெள்ளார் ஒன்றிய சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் தேமுதிக ஒரு கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளது. சேர்மன் பதவிக்கான தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த இரண்டு இடங்களில் தேமுதிகவின் ஆதரவு இருந்தால் மட்டும்மே வாய்ப்பு.
இந்நிலையில் பாமகவுக்கு எதிராக தேமுதிக முரண்டு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் வார்டு ஒதுக்கீட்டின்போதும், தேர்தல் களத்தின்போதும் எங்களுக்காக எந்த வேலையும் செய்யாத பாமகவுக்கு, எங்கள் கட்சி கவுன்சிலர்கள் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள்.
தேமுதிகவை அழிப்பது என்கிற குறிக்கோளில் உள்ள பாமகவுக்கு நாம் உதவி செய்யக்கூடாது என்கிற குரல்கள் தேமுதிக தரப்பில் இருந்து எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பால் என்ன செய்வது எனத்தெரியாமல் பாமக மாவட்ட நிர்வாகிகள் நொந்துப்போய்வுள்ளார்கள் என கூறப்படுகிறது.