புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் இரவு நேரங்களில் மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனே இதுகுறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து (கிழக்கு) காவல் கண்காணிப்பாளர் மாறன் மேற்பார்வையில் பெரியக்கடை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவரோ காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரை சோதனை செய்ததில் 10 கிராம் வீதம் 5 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவன் லாஸ்பேட்டை முத்துலிங்கம்பேட் பகுதியை சேர்ந்த சேகர்( 24) என்பது தெரியவந்தது. அதையடுத்து பெரியகடை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சேகரிடம் விசாரணை நடத்தியதில் அதன் பின்னணியில் பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி நாவற்குளம் முருகன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன்(22), சென்னை நீலாங்கரையை சேர்ந்த லோகநாதன்(45) ஆகியோர் சேகரின் கூட்டாளிகள் என்பது அம்பலமானது. அதனை தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சாவை கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேகர், பிரவீன், லோகநாதன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.